படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது – கே.பாக்யராஜ்

“வெடிகுண்டு பசங்க” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 
இந்த விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ்,
 
“அவ்வளவு பெரிய ஆஸ்ட்ரோ நிறுவனம், ஜனனி பாலுவை நம்பி இந்த “வெடிகுண்டு பசங்க” படத்தை ஒப்படைத்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இப்படத்தின் கதாநாயகன் தினேஷ் குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார், அது தான் நடனமாடுவது. இசையமைப்பாளர் விவேக் மெர்வினின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடல்களே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. முன்னதாக நாசர் சொன்னது போல, மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டியே படமாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அது கலைப்படமாக அமைந்து விடக் கூடாது. பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் இருக்கும் போது நிச்சயம் ரசிகர்கள் விரும்புவார்கள். 
இங்கு தலைப்பு பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்கள். முறையாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் தலைப்பு விசயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம்.
இப்போதிருக்கும் சினிமா சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை. திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது. எனவே இந்த “வெடிகுண்டு பசங்க” வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று பேசினார்.