நிழல் தாதாக்களின் கதையே பொது நலன் கருதி திரைப்படம் – இயக்குநர் சீயோன்

பணக்கார வர்க்கத்துக்கும், ஏழை, நடுத்தர வர்க்கத்துக்கும் நடக்கும் பிரச்சனைகளே பொது நலன் கருதி திரைப்படம். சூழ்நிலை கைதிகளாய் மாறி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் இளைஞர்களின் கதை இது.

இல்லாதவனே பொல்லாதவனாம் ஊரினிலே என்பது போல சகல துறைகளிலும் பந்தாடப்படும் நடுத்தர வர்க்கம். எதையாவது செய்து முன்னுக்கு வர முடியாதா, என துடிக்கும் இளைஞர்கள்? எதையும் செய்ய துணியும் ஆக்டோபஸ் பண முதலைகள்? இவர்களிடம் சிக்கி வாழ்வை சின்னாபின்னமாக்கும் நடுத்தர வர்க்கம்.

பணம் படைத்த பலரும் பணமற்றவர்களிடம் செலுத்தும் அதிகாரமே கந்துவட்டி. இந்த கந்துவட்டியால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. பல குடும்பங்கள் திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை தற்கொலை சம்பவம்

சமீபத்தில் பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து – சுப்புலட்சுமி மற்றும் குடும்பத்தினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிஜ சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய செய்தது. இப்படி சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள நிழல் தாதாக்களின் கதையே பொது நலன் கருதி திரைப்படம். இந்தப் படம் வெளிவரும் போது எனக்கு பல அச்சுறுத்தல்கள் வரும். ஆனாலும் உண்மையை சொல்ல பயப்பட தேவையில்லை என்பதால் துணிச்சலுடன் இப்படத்தை எடுத்துள்ளேன் என்கிறார் படத்தின் இயக்குநர் சீயோன்.

இந்த படத்தில் சூதுகவ்வும் கருணாகரன், சந்தோஷ், அருண்ஆதித் இவர்கள் கதையின் நாயகன்களாக நடிக்க சுபிக்ஷா, அனுசித்தாரா, லிசா இவர்கள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் திருப்புமுனை கதாபாத்திரங்களாக இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக் ஜாப்பி, வழக்கு எண் முத்துராமன், சுப்ரமணியபுரம் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை ஹரிகணேஷ், ஒளிப்பதிவு சுவாமிநாதன், கலை கோவி ஆனந்த், எழுத்து, இயக்கம் சீயோன். இத்திரைப்படத்தை புரொடக்ஷன்ஸ் சார்பாக அன்புவேல்ராஜன் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு விஜய் ஆனந்த்.