தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்
மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக மூவி பஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
மூவி பஃப் பர்ஸ்ட் கிளாப் சீஸன் -2 வின் போட்டிகள் ஜனவரி மாதம் இருபதாம் தேதியன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதல் சீஸனை விட மும்மடங்கு அளவில் அதாவது 750க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் போட்டியாளர்களாக பங்குபெற்றனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குறும்படங்களையும் தேர்வு குழுவினர் பார்வையிட்டனர். தேர்வு குழுவில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹாம்ச, இயக்குநர்கள் ராம் சுப்ரமணியன். விக்னேஷ் சிவன், கார்த்திக் நரேன், நித்திலன் சுவாமிநாதன், அருண் பிரபு, ஒலிப்பதிவு பொறியாளர் உதயகுமார், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், விமர்சகர் சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர் ஐம்பது குறும்படங்களை முதல் கட்டமாகவும்,பிறகு அதிலிருந்து ஐந்து குறும்படங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள்
குக்கருக்கு விசில் போடு (இயக்கம் ஷியாம் சுந்தர்)
கல்கி (இயக்கம் விஷ்ணு எதவன்)
கம்பளிப்பூச்சி (இயக்கம் V.G. பாலசுப்ரமணியன்)
மயிர் (இயக்கம் லோகி)
பேரார்வம் (இயக்கம் சாரங்கு தியாகு)
இந்த ஐந்து படங்களையும் ஜுன் 29 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கியூப் சிஸ்டம் உள்ள 200 திரையரங்குகளில் ஐந்து வாரங்களுக்கு சுழற்சி முறையில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் இந்த ஐந்து குறும்படங்களையும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பெரிய திரையில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு உருவாகிறது. அத்துடன் நில்லாமல் இதனை கண்டு ரசிக்கும் மக்கள் தங்களுக்கு விருப்பமான குறும்படங்களை எஸ் எம் எஸ் முறையில் பதிவிட்டு வாக்களிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.moviebuff.com என்ற இணைய தளத்தினை பார்வையிட்டு விளக்கம் பெறலாம்.
அதிக வாக்குகளை பெறும் குறும்படங்களை தேர்வு குழு பரிசீலனை செய்து முடிவுகளை அறிவிக்கும்.
முதல் பரிசு மூன்று லட்சம்
இரண்டாம் பரிசு இரண்டு லட்சம்
மூன்றாம் பரிசு ஒரு லட்சம்
இது தவிர தேர்வு பெற்ற இயக்குநர்கள் 2டி நிறுவனத்தில் கதைசொல்லும் வாய்ப்பும், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 2டி நிறுவனத்தை சார்ந்த தயாரிப்பாளர் ராஜசேகர் பேசும் போது, ‘இந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற ஐம்பது படைப்பாளிகளையும் நான் ஒரு முறை சந்தித்து கலந்துரையாடவிருக்கிறேன். தேர்தெடுக்கப்பட்ட இந்த ஐந்து இயக்குநர்களும் வெற்றிப் பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்புகளை உருவாக்கி தரும் இந்த அரிய முயற்சியை மூவி பஃப் தொடரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பேருதவியாக இருந்த நாக் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கும், லிட்டில் ஷோஸ் நிறுவனத்திற்கும், மூவி பஃப் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.’ என்றார்.