கூடுதல் பறக்கும் படை நியமனம் -துணை ராணுவம் வருகை தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்

rajesh-lakhaniசென்னையில் உள்ள தென்மண்டலங்களுக்கான பத்திரிகை தகவல் அலுவலகம் (பி.ஐ.பி.) தமிழக சட்டமன்ற தேர்தல் கையேட்டை தயாரித்து உள்ளது. இதில், தமிழக சட்டமன்ற வரலாறு, இதுவரை நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் உள்பட பல்வேறு முக்கிய தகவல் கள் இடம் பெற்று உள்ளன. தேர்தல் கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் தலைமை இயக்குனர் கே.முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில், தேர்தல் கையேட்டை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு வேட்பாளர்களின் செலவுகள் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். ரூ.28 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால் வேட்பாளர்கள் தகுதி இழந்தவர்களாக அறிவிக்கப்படலாம். தமிழகத்துக்கு இரண்டு முறை வந்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், தேர்தல் செலவை கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்துமாறு கூறி இருந்தார். இதன் காரணமாக வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக தமிழகத்துக்கு மத்திய செலவின பார்வையாளர்கள் வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலில் இதற்கு முன்பு வேட்புமனு தாக்கல் அன்று அல்லது அதற்கு பின்பு தான் பார்வையாளர்கள் வருவது வழக்கம். ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே முதன்முதலாக வேட்பு மனு தாக்கல் தேதியான 22-ந் தேதிக்கு முன்பாக அதாவது நாளை மறுநாள் (19-ந் தேதி) அல்லது 20-ந் தேதி மத்திய பார்வையாளர்களாக ஐ.ஆர்.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் செலவின பார்வையாளர்களாக தமிழகம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தமிழகத்தில் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிப்பார்கள். இவர்கள் 4 மண்டலங்களில் பிரிந்து செயல்படுவார்கள்.அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தும்போது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு விஷயத்தில் ஆளும் கட்சி மற்ற கட்சிகள் என்று பாரபட்சம் காட்டுவதில்லை.தமிழகத்தில் அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களுக்கு மதுபானம் கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு மது விற்கிறது என்ற கணக்கை தினமும் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை பற்றி தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களுக்கு நேரடியாக மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.இதுதவிர மதுபான தொழிற்சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவாகும் காட்சிகள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவாகி விடும்.மதுபான தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு செல்கிறதா? அல்லது வேறு எங்காவது கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வழக்கமான உற்பத்தியை விட 30 சதவீதம் அதிகமானால் அதுபற்றி விளக்கம் கேட்கப்படும்.இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.