பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், திரும்பபெறவும் வேண்டி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், திரும்பபெறவும் வேண்டி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் 81.28 ரூபாய்க்கும், டீசல் 73.06 ரூபாய்க்கும், மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.2.12 காசுகள் உயர்த்தி, 481.84 ரூபாயாகவும், மானியம் இல்லாத வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.49.50 காசுகள் உயர்த்தப்பட்டு, 712 ரூபாயாகவும் உள்ளது. எனவே இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

நடுத்தர மற்றும் சாமான்ய பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு சாமான்யரும் பெட்ரோல், டீசல் போட பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் பொழுது மத்திய, மாநில அரசுகளை திட்டக்கூடிய நிலை உருவாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கேரளா மாநிலம் ஒரு ரூபாய் குறைத்துள்ளது, அதுமட்டுமில்லாமல்
பாண்டிச்சேரியிலும் விலை உயர்வை குறைப்பதற்காக ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் இதை மிகமுக்கிய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாமல், கஷ்டப்படும் சாமான்ய மக்களுக்கு இந்த அரசு துணையாக இருந்து, பெட்ரோல், டீசல், மற்றும் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே GST யால் சிறு, குறு தொழில்கள், நெசவுத் தொழில்கள் மற்றும் அனைத்தும் வியாபாரங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு வேண்டுமானால் ஒரு லட்சம் கோடி வருமானம் GST யால் வந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு இதனால் எந்தவிதத்திலும் பலன் இல்லை.

“உரலுக்கு ஒரு புறம் இடி என்றால், மத்தளத்துக்கு இரு புறம் இடி என்பது போல” GST மற்றும் விலை வாசி உயர்வுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆகவே இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

நிறுவனத் தலைவர் / கழக பொதுச்செயலாளர்