சாவித்திரி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு

சாவித்திரி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரிலும் தெலுங்கில் மகாநடி என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் பத்திரிகையாளராக சமந்தாவும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சாவித்திரியாக தத்ரூபமாக நடித்துள்ளார், தேசிய விருது நிச்சயம் போன்ற பாராட்டுகள் அவருக்குக் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சாவித்திரி படக்குழுவினரை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
“சாவித்திரி வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்து இருந்தனர். அவர் பட்ட கஷ்டங்களை காட்டினார்கள். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருந்தார். இதுமாதிரியான கதைகள் அரிதாகத்தான் வருகின்றன. சாவித்திரி காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ் ஆகிய நடிகர்களுக்கு மட்டுமே நட்சத்திர அந்தஸ்து இருந்தது.
 
அவர்களுக்கு இணையாக சாவித்திரியையும் மதித்தனர். இந்த படத்தில் நடிகைகளுக்கு தேவையான ஒரு தகவலையும் சொல்லி இருந்தனர். படக்குழுவினரை பாராட்டுகிறேன். சாவித்திரி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்கிறது.” இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

தன்னைக் கெளரவப்படுத்திய ஆந்திர முதல்வருக்கு கீர்த்தி சுரேஷ் நன்றி தெரிவித்தார்.

இப்படத்தைத் தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், அமராவதி நகரின் வளர்ச்சிக்காக ரூ. 50 லட்சத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.