ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமியோடு வேலை செய்தது பேரின்பம் – டோவினோ தாமஸ்
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே அண்டை மாநில திரைப்படங்களுக்கு கொஞ்சம் சிறப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எப்போதும் கோலிவுட்டிற்கு நடிக்க வரும் நடிகர், நடிகைகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தங்களது சிறப்பான வரவேற்பால் நம் தமிழ் ரசிகர்கள் கொடுக்கிறார்கள், அது அவர்களின் முதல் படமாக இருந்தாலுமே. இது மற்ற மாநில சினிமா துறைகளிடம் இல்லாத ஒரு அரிய வகை குணாதிசயம். தமிழ் ரசிகர்கள் அபியும் அனுவும் படம் என்னுடைய முதல் படம் என தெரிந்ததும், என்னை சிறப்பாக உணர வைத்துள்ளார்கள். அவர்களின் அன்பும், நல்ல மனதும், பெருந்தன்மையும் என்னை மேலும் பொறுப்புடையவனாக உணர வைப்பதோடு, அவர்கள் விரும்பும் விஷயங்களை கொடுக்க வேண்டும் என்று என்னை உந்துகிறது என்று கூறுகிறார் கடவுளின் தேசத்திலிருந்து வந்திருக்கும் டோவினோ தாமஸ்.
அபியும் அனுவும் படத்தில் நல்ல குழுவுடன் பணிபுரிந்ததை பகிர்ந்து கொள்ளும் டோவினோ கூறும்போது, “முதலில் என்னுடைய கதாபாத்திரமும், படத்தின் ஸ்கிரிப்டும். பின் இயக்குனர் விஜயலட்சுமி படத்தின் இரண்டு முன்னணி கதாபாத்திரங்களும் தங்களுடைய உணர்வுகளை தங்கள் வழியில் வெளிப்படுத்தும் விதத்தில் கதையை மிகவும் அழுத்தமாக எழுதியிருக்கிறார். இப்படத்தில் ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமியோடு வேலை செய்தது ஒரு உண்மையான பேரின்பம். அவர் கதை நடக்கும் பின்புலத்தை அமைத்த விதமும், ஒளிப்பதிவாளர் அகிலன் அவருடைய ஐடியாவை திரையில் மாற்றிய விதமும் எல்லோராலும் பாராட்டக்கூடியது.
மேலும் அவர் கூறும்போது, “சமகால சினிமாவின் ஒப்பில்லா நடிகைகளில் பியா பாஜ்பாய் நிச்சயம் ஒருவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாகவும் வேடிக்கையாகவும் இருப்பார், ஆனால் கேமரா லென்ஸுக்கு முன்னால் நடிக்கும்போது அவருடைய மாற்றம் நம்ப முடியாதது” என்றார்.