வட கொரியா ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

வட கொரியா ஏவுகணை சோதனைக்கு  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், உலக நாடுகள் எதிர்ப்பை பொருட்படுத்தாத வடகொரியா, ஏவுகணை சோதனை நடத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் தேசத்தந்தையான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மறைந்த கிம் இல் சுங்-கின் பிறந்தநாள் நேற்று (15-ம் தேதி) கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ஏவுகணை சோதனைகளுடன் வடகொரியா கொண்டாடும். நடப்பு ஆண்டும், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை முயற்சி தோல்வியில் முடிந்தாலும், இது ஐ.நா. தீர்மானத்தின் விதிகளை மீறிய நடவடிக்கை என்று கூறியுள்ளது.அனைத்துவித நிகழ்வுகளையும் கவுன்சில் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கையை வடகொரியா தவிர்க்க வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, இந்த சோதனை முயற்சி வடகொரியாவின் மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.