தமிழ்நாடு குறும்படங்கள் போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வான ஜாட்ரிக்ஸ்
பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளிவந்த இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார். இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால், நடிகர் உதயநிதி ஸ்டாலின்,
டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.பி.ஜனநாதன், சசிகுமார் உள்ளிட்டோர் படத்தைப் பார்த்து விக்னேஷ்குமார் நடிப்பும், ஜாட்ரிக்ஸின் இசையும் மா.மோகன் எழுதிய பாடல் வரிகளும், சரண் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டினர்.
இந்த குறும்படத்தை இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்து பாராட்டி உள்ளனர். இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள பேட்ரிசியன் கலை கல்லூரியில் நடந்த தமிழ்நாடு குறும்பட விழா-2018-ல் (Tamilnadu short film festival 2018 season-2) மேகம் செல்லும் தூரம் படம் திரையிடப்பட்டு சிறந்த இசைக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.
இந்த விழாவில் 60 குறும்படங்கள் திரையிடப்பட்டன. கடுமையான போட்டிக்கு மத்தியில் மேகம் செல்லும் தூரம் படத்துக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் நடுவர்களால் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். விருதையும், பதக்கத்தையும், சான்றிதழையும் விழாவுக்கு வந்திருந்தவர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து ஜாட்ரிக்ஸ் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் மேகம் செல்லும் தூரம் குறும்படம் சிறந்த நடிகர் சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவிலும் இறுதி போட்டிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் பேசிய நடுவர்கள் மேகம் செல்லும் தூரம் படத்தின் இசையும் பாடலும் மனதை தொடுவதாகவும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையிலும் இருந்தது என்று பாராட்டினார்கள்.
60 குறும்படங்கள் பங்கேற்ற போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வாகி விருது பெற்ற ஜாட்ரிக்ஸ், மேற்கத்திய இசையில் திறமை பெற்று 16 வயதிலேயே லண்டனில் உள்ள ரிக்கார்டிங் லேபிள் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிறுவனம் இவரது இசையில் உருவான பாடல்களை அமெசான், ஆப்பிள் ஐடியூன்ஸ, ஸ்பாட்டி பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இசைத்தளங்களில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.