மய்யம் விசில் ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில் ஆப்’ என்ற புதிய செயலியை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
‘மய்யம் விசில் ஆப்’ செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:-
பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை சாமானியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் ‘மய்யம் விசில் ஆப்’. பத்திரிகையாளர்களின் பலம் சாமானியருக்கு இருக்காது. பத்திரிகையாளர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’.
இது, இருக்கும் குறைகளை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்து வைக்கும் மந்திரகோல் அல்ல. இது இருக்கும் குறைகளை நாம் செவி சாய்த்து கேட்பதற்கும், கண் கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒரு கருவி. இந்த கருவி மூலம் கிடைக்கும் தகவல் எல்லாம் எங்களுக்கு வீட்டுப்பாடம் ஆகும்.
தற்போதைக்கு இதை மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே கொடுக்கிறோம். அதற்கு தற்காப்பு ஒரு காரணம். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் செய்வார்கள் என்பதும் ஒரு காரணம். போலீசுக்கோ, அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ மாற்று அல்ல இது. அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு கருவியாக அல்லது விமர்சனம் செய்யும் கருவியாக இருக்குமே தவிர, அதற்கு மாற்று அல்ல.
இந்த செயலியை பயன்படுத்தும் நேரம் நாளைக்கு (இன்று) வருகிறது. நாளைக்கு (இன்று) கிராம பஞ்சாயத்துகள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவும், நல்லபடி நடந்தால் அதை பாராட்டவும், நடக்கவே இல்லை என்றால், ஏன் நடக்கவில்லை? என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தவும் இது உபயோகமாக இருக்கும்.
நாளை (இன்று) நாங்கள் தத்தெடுத்துக்கொண்ட அதிகத்தூர் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் நடக்க இருக்கிறது. நாங்கள் அதை தத்து எடுத்தவர்கள் என்ற உரிமையில் அங்கே செல்கிறோம். கிராம சபை கூட்டத்தில் பங்கெடுக்க அனுமதி கிடைத்தால் பங்கெடுப்போம். இல்லையேல், அந்த கிராமத்தை சுற்றி வந்து குறைகளை கேட்டறிந்து ஆவன செய்ய முற்படுவோம். சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த கிராமத்துக்கு நாளை (இன்று) நான் செல்ல இருக்கிறேன்.