திருச்சியில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

அரியலூர் மாணவி அனிதா கடந்த வாரம் நீட் தேர்வு விரக்தியால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் கி.ஆ.பெ கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று தூய வளனார் கல்லூரி மாணவர்கள் மேற்கூறிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், அனிதாவுக்காகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். விவசாயிகள் பிரச்னை குறித்தும் பேச உள்ளோம். திருச்சியின் பிற பகுதியில் இருந்தும் மாணவர்கள் எங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றனர். பொது மக்களும் எங்களுடன் இணைய வேண்டும். என்ன நடந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.