ஒடியன் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் கேரளாவில் தன் பயணத்தை தொடங்கும் சாம் சிஎஸ்

குறிப்புகளை தாண்டி இசை பேசும்பொழுது, இசை ரசிகர்கள் அதில் இருக்கும் உள்ளீடுகளை, உருவகங்களை தாண்டி உணர்ந்து கொள்கிறார்கள். இசை குறிப்புகள் உயிராகி, நம் ஆவலை தூண்டி நிபந்தனையில்லாமல் நம்மை பின்பற்ற வைக்கிறது. சாம் சிஎஸ் தன்னுடைய இசை பரிமாணங்களை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை. விக்ரம் வேதாவின் பின்னணி இசையில் கதை சொல்லும் பாணியில் அமைந்த ஹீரோவுக்கான ஆர்க்கெஸ்ட்ரல் கோரஸ் ஆக இருந்தாலும் சரி, புரியாத புதிர் படத்தில் வந்த எமோஷனல் எசன்ஸ் ஆக இருந்தாலும் சரி அவை நம் மனதை விட்டு அகலாதவையாக அமைந்தன. புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கும் சாம், தற்போது மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் கேரளாவில் தன் பயணத்தை தொடங்க இருக்கிறார்.
விக்ரம் வேதா ரிலீஸுக்கு பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று விடாமல் ஒட்டு மொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் என தீவிரமாக நம்புபவன் நான். ஆனால் மோகன்லால் சாரின் ஒடியன் படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக அமைந்திருந்தது என்றார் சாம் சிஎஸ். 
மிகவும் உற்சாகத்தில் ஒடியன் கதை கொண்டுள்ள இசையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி விட்டார் சாம். “ஒடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதை கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதான இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது” என்றார்.
அப்படி என்ன தனித்துவமான இசைக்கருவிகளை ஒடியன் படத்தில் உபயோகித்தீர்கள் என என கேட்டபோது, “வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட் தான். ஆனால் 6 அடி நீளம் மூங்கில் இசைக்கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்க தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம். ” என்றார். 
படத்தை முழுமையாக காட்சிப்படுத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ஒடியன் படக்குழுவையும் கவர்ந்து விட்டார் சாம். நறுமணம் கமழும் மூணாறு மலைப்பகுதிகளில் வளர்ந்த இந்த இளம் இசையமைப்பாளர் ஓரிரண்டு காரணங்களால் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்கிறார். ஒன்று மோகன்லால் படம் தன்னுடைய முதல் படமாக அமைந்தது, மற்றொன்று ஒடியன் படம் வழக்கத்துக்கு மாறான, இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் படமாக அமைந்தது என்கிறார். 
இதற்கிடையில் கரு, கொரில்லா, அடங்க மறு, மிஸ்டர் சந்திரமௌலி, வஞ்சகர் உலகம் மற்றும் சில படங்கள் என அடுத்தடுத்த படங்களால் தமிழ் திரை உலகின் இன்றியமையாத இசை அமைப்பாளர் ஆகிறார் சி எஸ் சாம்.