கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார். 

புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின் மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே “மேகம் செல்லும் தூரம்” வீடியோ பாடலின் சாராம்சம். இந்த பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு மட்டுமே இமாச்சல் பிரதேஷ், ராஜஸ்தான், நீலகிரி ஆகிய இடங்களுக்குப் பயணித்திருக்கிறது. மேலும் சில காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டிக்கின்றன. 

இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண் “ஒரு கிடாயின் கருணை மனு”, “விழித்திரு” ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் முழுக்க காதலின் வலி, இளைஞனின் லட்சியத் தேடல், பெண்ணின் மனநிலை, பயணா அனுபவம், காதலின் புரிதல் என பல அனுபவங்களை ஒரே களத்திற்குள் தனது அழகு கொஞ்சும் தமிழ் வரிகளால் நிரப்பியிருக்கிறார் பாடலாசியரும், பத்திரிக்கையாளருமான ம.மோகன். இவரின் வரிகளுக்கு இயல்பான இசையின் மூலம் உயிர் தந்திருப்பவர் இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ். இவர் வெறும் 17 வயது மட்டுமே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுஸ்துப் ரவியின் குரலில் அழகாய் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கு, எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார் அருள்மொழி செல்வன். 

மேலும் இந்த வீடியோ பாடலை “மஹாலட்சுமி தியேட்டர்ஸ்” உரிமையாளர் ஷைலேந்தர் சிங் தயாரித்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறை காதலர்களின் வாழ்வில் சகஜமாகிவிட்ட “பிரேக்-அப்” மற்றும் “ஈகோ” போன்றவற்றை மையமாய் வைத்து வெளிவந்திருக்கும் இந்த வீடியோ பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் “யூ-டியூப்” வலைதளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.