திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடப்படும் ‘QUBE’ போன்ற தொழில்நுட்பத்திற்கான கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் எந்த திரைப்படங்களையும் வெளிடாமல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார்கள். இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்!
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்து வரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்புகொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத கண்டு கொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு (DIGITAL SERVICE PROVIDERS) எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச் 1-ஆம் தேதி முதல், எங்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.
கடந்த ஃபிப்ரவரி 1-ஆம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக தமிழ் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த DIGITAL SERVICE PROVIDERS-க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
எனவே தொடர்ந்து அன்றாடம் பலவேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நமது தமிழ் திரையுலகமானது மிகமிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை ஒரு கேள்விக்குறியாகிவிட்டதை அனைவரும் அறிந்ததே! இந்த நிலை மாற நமது நியாமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடுவெடுத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.