சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்க விழா

சுதேசி மக்கள் நீதி கட்சியின் துவக்க விழா சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் கட்சியின் கொடி, கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
சுதேசி மக்கள் நீதி கட்சியின் கொள்கைகள் வருமாறு:-
இன்றைய காலகட்டத்தில் அரசியல் சீர்கெட்டு உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களை காக்க அரசு தவறி விட்டது. படித்த இளைஞர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.
நுகர்வோர்களாகிய மக்கள் அன்றாடம் கவர்ச்சி விளம்பரங்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சோம்பேறித் தனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
அரசு துறைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்காக அரசு பொருளாதார திட்டங்களை மேம்படுத்த வேண்டும். நாட்டிற்கு சவாலாக விளங்கும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சாதி கலவரம் உள்ளிட்ட கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடுவோம்.
சமூக நலன் கருதி, மக்களோடு மக்களாக நின்று அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். லஞ்ச லாவண்யத்திற்கு அடிமையாகி, வேலியே பயிரை மேய்கிறது என்பது போன்று செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது. மக்களின் நலனுக்காக புதிய கடைமைகளை தவறாது செய்வது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கட்சியின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான கப்பல் கே.எஸ். ராஜேந்திரன் கூறியதாவது:-
அரசு இயந்திரம் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் சிறிய கட்சிகள் தோன்ற அவசியம் இல்லை. மக்கள் நலனே எங்கள் கட்சியின் கொள்கை. மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைப்போம். 2021-ம் ஆண்டு தேர்தலில், சுதேசி மக்கள் நீதி கட்சி முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கட்சி தலைவர் என். ரமேஷ், பொருளாளர் ஆர். வரலெட்சுமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்