போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் மூன்றாவது நாளாக தொடருகிறது

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நேற்று முன்தினம் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து இன்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டமானது நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பேருந்துகள் இயங்காததை பயன்படுத்திக் கொண்ட தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூல் செய்தன.

ஆனால் பெரும்பான்மையான மக்கள் வேறு வழியின்றி அவற்றில் பயணம் செய்தனர். அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் மட்டும் அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். சில இடங்களில் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிரந்தர ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினக்கூலியாக தற்காலிக ஓட்டுநர்களுக்கு 436 ரூபாயும், நடத்துநர்களுக்கு 429 ரூபாயும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியில் மொத்தம் உள்ள 865 பேருந்துகளில் 50 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அரியலூரில் 194 பேருந்துகளில் 31 பேருந்துகளும், திருவாரூரில் 239 பேருந்துகளில் 50 பேருந்துகளும், கடலூரில் 350 பேருந்துகளில் 44 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 20% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான கரூரில் 85%  பேருந்துகள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்றை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.