சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை

 கடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள், தற்போது மீண்டும் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். சென்ற முறை போலவே மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். 26 ஆம் தேதியான இன்று தொடங்கிய இச்சந்திப்பானது 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
 முதல் நாளான இன்று சூப்பர் ஸ்டாருடன் அவருக்கு மிகவும் நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய போது.,” மே மாதம் நடந்த சந்திப்புக்கு பின் காலா படத்தின் சூட்டிங்க், மழை போன்ற சில காரணங்களினால் என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இப்பொழுது தான் அந்த பொன்னான நேரம் வாய்த்துள்ளது. என் பிறந்த நாளன்று என்னை பார்க்க ரசிகர்கள் பலரும் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் பிறந்த நாளன்று மிகவும் தனிமையே விரும்புவேன், வெகுகாலமாகவே பிறந்த நாளன்று யாரையும் சந்திப்பதில்லை. இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறைய ரசிகர்கள் என்னை சந்திக்க முயன்று ஏமாற்றம் அடைந்துவிட்டனர், அதற்கு மிக வருத்தப்பட்டேன், மண்ணிக்கவும். ரசிகர்கள் பலரும் என்னை சந்திக்க பெரிதும் முயல்கின்றனர். கிடைக்கின்ற நேரத்திற்கேற்ப வருங்காலத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.”  என்று அவர் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார். ” மக்களை காட்டிலும் ஊடக நண்பர்களே என் அரசியல் பற்றிய அறிவிப்பு  குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதைபற்றிய பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. அரசியல் பற்றிய பயம் எனக்கு ஒருபோதும் கிடையாது, ஏனென்றால் அரசியல் எனக்கு புதிதல்ல. யுத்தத்தில் வேகத்தை காட்டிலும் வியூகமே முக்கியம். அரசியல் பற்றிய அறிவிப்பை 31 ஆம் தேதி அறிவிக்கிறேன் ” என்று அவர் கூறினார்