படப்பிடிப்பு குழுவின் உழைப்பை மனதார பாராட்டும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி

தனது தரமான சிறந்த ஒளிப்பதிவின் மூலம் ஒட்டு மொத்த படக்குழுவையும் ஆச்சர்யப்படுத்தும் எந்த ஒரு ஒளிப்பதிவாளரும் தன்னுடைய துறையை மட்டுமே பெருமிதத்துடன் நினைவு கூர்வார். இதற்கு முற்றிலும் மாறாக, குழந்தை உள்ளத்தோடு ஒட்டு மொத்த குழுவின் உழைப்பையும் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

இயக்குனர் ராஜாவின் திறமையான இயக்கத்தை பற்றி ராம்ஜி கூறும்போது, “சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது, இந்த படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குனர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒவ்வொரு நாளும் மாலை படப்படிப்பை முடித்து விட்டு, மறுநாள் காலை படப்பிடிப்புக்கு போகும்போது அவரின் உதவியாளர்கள் ஒரு வித தியான நிலையில் இருப்பது போல வலம் வருவார்கள். அதற்கு காரணம் காலை 4 மணி வரை எடுக்க வேண்டிய காட்சிகளை விவாதித்து விட்டு, மீண்டும் 8 மணிக்கு படப்பிடிப்புக்கு ஆஜராகி விடுவார்கள்” என்றார்.

இதுவரை சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார், அதற்கேற்ப அவரின் தோற்றத்தையும் காட்சிகளையும் உருவாக்கினோம்” என சிவகார்த்திகேயனை பற்றி கூறினார் ராம்ஜி.

கலை இயக்குனர் முத்துராஜ் சின்ன சின்ன நுட்பமான விஷயங்களை சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். குடிசை பகுதிகளில் நிறைய முருங்கை மரங்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். செட்டில் நம்பக தன்மைக்காக அவற்றை வளர்க்க எந்த தயக்கமும் காட்டாமல் உழைத்தார். அது போலவே கூவத்தை நிஜமாக காட்ட நிறைய குப்பைகளையும், இரும்பு பைப்புகளையும் கொண்டு வந்து தன் வேலையை இன்னும் சிறப்பாக செய்தார். 

தயாரிப்பாளர் ராஜாவின் மேன்மையை ஒரு சில வார்த்தைகளில் சாதாரணமாக கூறி விட முடியாது. அவரது நற்குணங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவருக்கும் நேர்மறையான எண்ணங்களை பரப்பும். நிறைய செலவு செய்து எடுத்து விட்டோமே என்பதற்காக, கதையின் ஓட்டத்துக்கு தடையாக இருக்கும் காட்சிகளை நீக்குவதற்கு கூட அவர் தயங்கியதே இல்லை என தயாரிப்பாளர்  ராஜாவின் பெருமைகளையும் கூறினார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.