25 கோடி ரூபாய் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு  – முதல்வர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த  30ஆம் தேதி காலை 8.30 மணியளவில்  ஒகி புயல் தாக்கியது. புயல் காரணமாக பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை  பெய்தது. இதனால் அம்மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் குமரி மாவட்டம் மூன்றாவது நாளாக இருளில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புயல் தற்போது லட்சத்தீவை நோக்கி நகர்ந்தாலும், தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  மின்சார இணைப்பு குறித்து அமைச்சர் தங்கமணி, “மாவட்டம் முழுவதும் ஞாயிறு இரவுக்குள் அல்லது திங்கட்கிழமை மதியத்திற்குள் மின் இணைப்பை சரி செய்வோம்’ என்றார்.  இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 25 கோடி ரூபாய் தமிழக அரசால்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிட்டுள்ளார்.