கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி செண்பக நகர், சிந்தமணிநகர். இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செண்பகநகர் பகுதியில் பெட்டகுளம் ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழும் மக்கள் குப்பைகளை குளத்தில் கொட்டுவதாலும், கழிவுநீர் குளத்திற்கு செல்வதால் குளம் கழிவு நீர் குட்டையாக காட்சியளிப்பது மட்டுமின்றி துர்நாற்றம் வீசுவதால் இங்கு வசிக்க கூடிய மக்களால் உணவு கூட சாப்பிட முடியாத நிலை உள்ளது. மேலும் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுவதால் இரவில் தூங்க முடியமால் அவதிப்பட்டு வருவது மட்டுமின்றி, சுகாதார சீர்கேட்டினால் பலருக்கு டெங்குகாய்ச்சல் வரும் அபாயம் உள்ளதாகவும், சிறுகுழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.கடந்த மாதம் டெங்குவினால் ஒரு குழந்தை இறந்துள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குப்பைகளை கொட்டுவதற்கும் கழிவு நீர் செல்வதற்கும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் குளத்தினை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் அண்ணா தொழிற்ச்சங்க மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கொசுவிரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொசுவத்தி சூருள், வேப்பிலை மற்றும் கொசுவத்தி பேட்டுடன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கோஷங்கள் எழுப்பினர். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இங்குள்ள குப்பைகளை ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டி போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.