2 ஜி வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்தி வைப்பு

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் மத்தியில் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் ஆ. ராசா. இவர் தகுதியற்ற நிறுவனங்களுக்கும், தனக்கு தெரிந்த நிறுவனங்களுக்கும் முறைகேடாக 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 2ஜி முறைகேடு மூலம் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், சி.பி.ஐ-யின் அறிக்கையில் அரசு கருவூலத்திற்கு 22,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட பலர் மீது ,குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நீதிபதி ஓ.பி ஷைனி விசாரித்து வந்த இந்த வழக்கில் இறுதி விசாரணை, வாத-பிரதிவாதங்கள் கடந்த ஏப்ரல் மாதமே முடிவடைந்து விட்டன.

இதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தின் முன்பாக வந்த போது தீர்ப்பு தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை என்றும், தீர்ப்பை தயாரிக்க இன்னும் 3 வார கால அவகாசம் தேவைப்படுவதாக நீதிபதி ஷைனி தெரிவித்தார்.

பின்னர், தீர்ப்பு தேதியை டிசம்பர் டிசம்பர் 5ஆம் தேதி அறிவிப்பதாக கூறினார். இந்த வழக்கோடு தொடர்புடைய லட்ச கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி தள்ளிப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.