தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறைக்கு பிறகு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து சென்னையில் அரையாண்டு முன் மாதிரித்தேர்வுகள் (Pre Half Yearly Exam) ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “சென்னையில் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையால் மாணவர்களுக்கு இன்னும் பாடங்கள் முடிக்கப்படவில்லை என தகவல் வந்தது.
எனவே சென்னையில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு முன் மாதிரித் தேர்வுகள் நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரையாண்டு முன் மாதிரித் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது” என அறிவித்துள்ளார்.