தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, மருத்துவ துறை உள்ளிட்டவற்றுக்கு எதிராக காட்சி உள்ளதால் தேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய மீடியாக்களும் விவாதம் செய்து வருகின்றன. பாஜகவுக்கு எதிராக உள்ள 4 காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்பேரில் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் குழு முடிவு செய்துள்ளது. தீபாவளி முதல் மெர்சல் குறித்த பேச்சுகளும், விவாதங்களும் அதிகமாயுள்ளன. பெரும்பாலான மக்கள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுபோல் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், தலைநகரத்தில் வடிவேலு ஒரு காமெடி கூறுவார். பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்.. அந்த நிலையில்தான் தற்போது பாஜக உள்ளது. எதற்கெடுத்தாலும் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதை பார்க்கும்போது பாஜக என்பது பாரதிய ஜனதா கட்சி அல்ல, எல்லாவற்றுக்கும் தடை கோரி டென்ஷனாகும் கட்சி என்றுதான் நாம் கூற வேண்டும் என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.