சென்னையில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் இளைஞரை சந்தேக வழக்கில் தேனாம்பேட்டை போலீசார் இருவர் அடித்து கையை முறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரில், சர்ச்சையில் சிக்கிய இரு காவலர்களையும் இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
குணா என்ற 25 வயதான இந்த இளைஞர் தான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் இருவரால் அடித்து கை முறிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஸ்பெஷல் டீம் காவலர்களான மாரி மற்றும் முரளி, என இந்த இருவரும் தான் வேலைக்கு சென்று கொண்டிருந்த இளைஞனின் கையை உடைத்தவர்கள். ஸ்பெஷல் டீம் காவலர்களான இவர்கள் இருவரும் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளையர்களை கண்காணித்து பிடிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால் தாங்கள் சந்தேகப்படும் நபர்களை அழைத்து சென்று ஸ்பெஷலாக கவனிக்கும் அதிகாரத்தோடு வலம் வந்துள்ளனர்.
சம்பவம் நடந்த புதன் கிழமை அன்று கிரியப்பா சாலையில் கையில் லத்தியோடு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்த இளைஞர் குணாவை மறித்து, பலர் முன்னிலையில் அடித்து கையை முறித்துவிட்டு அங்கிருந்து இருவரும் சென்றுள்ளனர். குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகித்தால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து, உண்மை இருப்பின் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். மாறாக பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்து துன்புறுத்தியதால் காவலர்கள் மீது காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் கொடுத்தனர் அப்பகுதி மக்கள்.
இதையடுத்து காவலர்கள் மாரி, முரளி இருவரையும் ஸ்பெஷல் டீமில் இருந்து மாற்றி வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். காவல் துறையினர் மீது பொதுமக்களுக்கு வெறுப்பை உருவாக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என காவல் துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்