கோவில்பட்டியில் 3 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் – பள்ளிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் மற்றும் கடலையூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவன் ஒருவன் என 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது.3 பேரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் கோட்டாட்சியர் அனிதா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, தாசில்தார் ஜான்சான் தேவசகாயம் மற்றும் நகராட்சி சுகதார பிரிவு அலுவலர்கள் கொண்ட குழு கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.

பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குழு அறிவுறுத்தியது. மேலும் டெங்கு காய்ச்சலால் 2 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்த போது பள்ளி வளாகம் சுத்தமாக இல்லமால் குப்பைகளாக கிடந்த பார்த்து அதிர்ச்சியடைந்தனர். டெங்கு குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு பள்ளியிலே அதனை பின்பற்றமால் இருப்பதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப்பின் மேரியிடம் தங்கள் கண்டனத்தினை தெரிவித்ததும் மட்டுமின்றி நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்தனர்.