பிரதமர் மோடியுடன் தமிழக துணை முதல்வர் சந்திப்பு

 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடியைத் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துச் சந்தித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மைத்திரேயன், கே.பி முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அவருடன் பிரதமர் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். இந்தச் சந்திப்பில் தமிழக பிரச்னைகள் குறித்து முதல்வருடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை அவர் டெல்லி சென்ற போதே பிரதமரை சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டார் ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இந்த நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நேற்று டெல்லி சென்ற ஓபிஎஸ், பிரதமரைச் சந்திக்க அனுமதி வழங்கக் கோரினார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை பிரதமரின் இல்லத்தில் வைத்து அவரைச் சந்திக்க பிரதமர் அலுவலகம் ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கியது.  அதன் பேரில் பிரதமரைச் சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை, தமிழக வளர்ச்சி பணிகள் போன்றவை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் மத்திய மின்துறை அமைச்சரை ஓபிஎஸ் சந்திக்கிறார். இதனிடையே, முதல்வர் பழனிச்சாமி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவே ஓபிஎஸ் பிரதமரை சந்திக்கச் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை பன்னீர் செல்வம் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.