சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு இன்று பரோல் வழங்கப்பட்டது. 7 மாத சிறை வாசத்திற்கு பிறகு அவருக்கு 5 நாள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பெங்களூர் சென்ற டிடிவி தினகரன் சசிகலாவுடன் சந்தித்தார். இளவரசியின் மகன் விவேக், அவரது மனைவி கீத்தனா ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை சந்திக்க வேண்டி பரோல் கேட்டு சசிகலா மனு அளித்திருந்தார். 15 நாட்கள் பரோல் கேட்ட நிலையில் 5 நாட்கள் மட்டும் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளி வந்திருப்பது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. சென்னை வரும் சசிகலா தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணாபிரியாவின் இல்லத்தில் தங்க உள்ளார். இந்தநிலையில், சசிகலாவுக்கான பரோல் ஆணை விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், சசிகலாவுக்கு, கணவர் தங்கியுள்ள மருத்துவமனை தவிர வேறு இடங்களுக்கு செல்லக் கூடாது. விண்ணப்பத்தில் குறிப்பிட்ட (கிருஷ்ணாபிரியா) இல்லத்தில்தான் தங்க வேண்டும். அங்கு, வருகையாளர்களை சந்திக்கக் கூடாது. எந்த ஒரு அரசியல் அல்லது பொது மக்கள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது. ஊடகங்களை (டி.வி மற்றும் பத்திரிகை) சந்திக்க கூடாது என பரோல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.