ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மெர்சல் படம் தீபாவளி தினமான அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, படக்குழுவினர், பட ரிலீசுக்கான அனைத்துப் பணிகளிலும் பம்பரமாக சுழன்று வேலை செய்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் படத்தை சென்சாருக்கு அனுப்ப உள்ளனர். இந்நிலையில், மெர்சல் படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று தயாரிப்பாளர் சங்க கூட்டம், தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று முதல் எந்தப் புதிய திரைப்படங்களும் வெளியிடப்படமாட்டாது என்று தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு மேலும் 10% கேளிக்கை வரிகள் தமிழ்ப்படங்களுக்கும், 20% பிறமொழி படங்களுக்கும் விதித்துள்ளதை எதிர்த்தே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மெர்சல் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மெர்சல் படத் தலைப்பைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். மெர்சல் படத்திற்கு பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் படத் தலைப்புக்கு தடை விதிக்கக் கூடாது என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.