துணை முதல்வர் ஓபிஎஸ் சிவாஜி மணி மண்டபத்தை  திறந்து வைக்கிறார்

சிவாஜி கணேசன் மணி மண்டபம் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடம்பூர் ராஜு முன்னிலையில் நடைபெறும் என தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை முதல்வர் திறந்து வைக்க வேண்டும் என நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நடிகர் சங்கம் கூறியதாவது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது போல் சிவாஜி மணி மண்டப விழாவை விமர்சையாக கொண்டாட வேண்டும். சிவாஜி மணி மண்டபத்தை முதல்வர் வந்து திறந்து வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் போற்றிய சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். மணி மண்டப திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்வதே சிவாஜி கணேசனுக்கு மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நடிகர் சங்க கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை திறந்து வைப்பார் என அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்று வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் துணை முதல்வர் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.  துணை முதல்வர் ஓபிஎஸ் இந்த விழாவில் பங்கேற்பதை நடிகர் சங்கம் வரவேற்றுள்ளது. சிவாஜி கணேசன் மகனும், நடிகருமான பிரபு கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் விழாவில் பங்கேற்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.