திலீப்பின் காவல் நீட்டிப்பு

நடிகை பாவனாவை கடத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் நடிகர் திலீப். தற்போது அவர் கேரளாவின் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி திலீப் சார்பில், இரண்டுமுறை மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதையெல்லாம் கேரளா நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் 3வது முறையாக அவரது வழக்கறிஞர் ஜாமீன் கோரினார். அப்போது நீதிபதியிடம் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், நடிகையை கடத்த, குற்றவாளி பல்சர் சுனிலுக்கு திலீப், ரூ.1.5 கோடி பணம் கொடுத்ததாக கூறினார்.

போலீசாரிடம் மாட்டிக் கொண்டால், மேலும் பணம் கொடுக்க திலீப் உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார். எனவே, திலீப்புக்கு ஜாமீன் கொடுத்தால், சாட்சிகளை கலைத்துவிட வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று காணொளி காட்சி மூலம், திலீப் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அக்டோபர் 12ஆம் தேதி திலீப்பின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.