பொதுமக்களிடம் தனிக் கட்சி தொடங்க நிதி திரட்டுவேன் – கமல் 

Idhu Nama Aalu Audio rights gone to 1.5cr

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது. தனது கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வந்த கமல், தற்போது தீவிரமாக அரசியலில் களம் இறங்குவது குறித்து தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் தெரிவித்து வருகிறார். இன்று ஒரு தொலைக்காட்சிக்கு, கமல்ஹாசன் அளித்த பேட்டியில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்

நான் தனிக்கட்சி தொடங்குவது பற்றி பல்வேறு தலைவர்கள், பெரியவர்கள், அறிவாளிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். கெஜ்ரிவாலை சந்தித்தால் அவருடன் கூட்டணி என்று அர்த்தமில்லை. நான் போய் அவரை சந்திக்கவில்லை. அவர்தான் என்னை வந்து சந்தித்தார். நேரம் குறிப்பிட்டு கட்சி தொடங்க மாட்டேன். ஆனால், நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவேன். எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன்.

தமிழ்நாட்டில் திமு.க., அ.தி.மு.க. கட்சிகளின் ஊழல்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த ஊழலுக்கு எதிராக தான் எனது போராட்டம் இருக்கும். நானும், ரஜினியும் நல்ல நண்பர்கள். அவர் ஒரு பாதையில் செல்கிறார். நான் ஒரு பாதையில் செல்கிறேன். எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. நான் அரசியலில் இறங்கப் போகிறேன் என்று அவரிடம் தெரிவித்து விட்டேன். ரஜினி, ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர். பா.ஜனதாவுடன் கூட்டணி சேர அவர் ஏற்றவர். நான் பகுத்தறிவாதி, ஜாதிக்கு அப்பாற்பட்டவன், கம்யூனிசவாதியும் அல்ல. 

தமிழகம் பற்றி டெல்லிக்கு தெரியாது. டெல்லி பற்றி தமிழகத்துக்கு தெரியாது. அதனால்தான் தேசிய கட்சிகளால் இங்கு ஜெயிக்க முடியவில்லை. என்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். நான் தொடங்கும் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி போல பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படும். புதிய கட்சிக்கான அனைத்து பணிகளும் தொடங்கி விட்டன. அது எப்போது என்று அவசரப்பட்டு சொல்ல முடியாது. நிச்சயம் அது நடக்கும் என அந்தப் பேட்டியில் கமல் கூறியுள்ளார்.