636 கால்நடை மருத்துவர்கள் நியமன வழக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

supreme-courtதமிழக அரசு 2011-ம் ஆண்டு 636 கால்நடை மருத்துவர்களை நியமித்து ஒரு அரசாணை வெளியிட்டது. அவர்களின் ஒரு வருட பணிக்காலம் நிறைவடைந்த நிலையில், 636 மருத்துவர்களை பணியிலிருந்து நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த கால்நடை மருத்துவர்கள் அனைவரும் சரியான வழிமுறைகளின்படி நியமிக்கப்படவில்லை. அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படாமல், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறி அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தொடரப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த அரசாணை தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தியே பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டு விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.