ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்சிக்கு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் மெஸ்சி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் 500 கோல்களை அவர் எட்டியிருக்கிறார். 28 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 450 கோல்களும், அர்ஜென்டினாவுக்காக 50 கோல்களும் அடித்திருக்கிறார். மெஸ்சி இடது காலால் 406 கோல்களும், வலது காலால் 71 கோல்களும் உதைத்திருக்கிறார். 21 கோலை தலையால் முட்டி தள்ளியிருக்கிறார். இதர வகையில் கிடைத்த கோல் எண்ணிக்கை 2.
இந்த தோல்வியால் மெஸ்சியின் பார்சிலோனா அணி மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பார்சிலோனா அணி தொடர்ந்து சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். கடந்த 13 ஆண்டுகளில் பார்சிலோனா தொடர்ந்து 3 தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும். புள்ளி பட்டியலில் பார்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் தலா 76 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றன.