ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பண புழக்கத்தில் 86 சதவீதம் இந்த நோட்டுகளே இருந்தன. இவ்வளவு நோட்டுகளையும் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவித்த அதே நேரத்தில், அதற்கு ஈடாக புதிய ரூ. 2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. 100 ரூபாய் நோட்டும் போதுமான அளவுக்கு புழக்கத்தில் இல்லை. எனவே, பண தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஆரம்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏ.டி.எம்.களில் எடுக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது ரூ.4,500 ஆக உயர்த்தி உள்ளனர். ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் பல இடங்களில் ஏடி.எம்.களிலும், வங்கிகளிலும் மக்கள் நீண்ட கியூவில் நிற்கும் நிலையே நிலவுகிறது. ஆரம்பத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடி இருந்த நிலையில் இப்போது ஓரளவு ஏ.டி.எம்.கள் இயங்குகின்றன. எனவே, எப்படியாவது பணம் கிடைத்து விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் நிலைமை முற்றிலும் சீராகி விடும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் 2 லட்சத்து 24 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ரூபாய் நோட்டுகள் இல்லாததால் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஏ.டி.எம்.கள் மட்டுமே இயங்கி வந்தன. தற்போது ரிசர்வ் வங்கியில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ஏ.டி.எம்.கள் இயங்கி வருகின்றன. வழக்கமாக ஏ.டி.எம்.களுக்கு நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பப்படும். ஆனால், கடந்த 2 மாதமாக ஏ.டி.எம்.களுக்கு 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி வரை மட்டுமே அனுப்பப்பட்டு வந்தது. சமீப காலமாக பணம் அதிகமாக அனுப்பப்படுகிறது. தற்போது ரூ.9 ஆயிரம் கோடி வரை அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, பண தட்டுப்பாடு பெருமளவு நீங்கி விட்டது. பிப்ரவரி மாதத்தில் முற்றிலும் நிலைமை சீராகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.