கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலும் ஒன்று. இங்குள்ள ரகசிய அறைகளில் கோடிக்கணக்கில் தங்க, வைர, வைடூரிய நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த இக்கோவிலுக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளது. இங்கு ஐப்பசி, பங்குனி மாதங்களில் பத்மநாபசுவாமிக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா இறுதி நாளன்று சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும்.
இதற்காக சுவாமியை கோவில் நிர்வாகிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். திருவனந்தபுரத்தில் இருந்து சங்குமுகம் கடற்கரைக்கு கொண்டு சென்று ஆராட்டு நடத்துவார்கள். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வருவார்கள். ஊர்வலம் செல்லும் பாதையில் இப்போது திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஓடு பாதைகள் ஊர்வலம் செல்லும் வழியில் உள்ளது. ஆனாலும் பத்மநாப சுவாமியின் ஆராட்டு ஊர்வலம் இப்போதும் அதே பாதையில் நடக்கிறது.
விமான நிலையம் அமைந்தாலும் ஊர்வலப்பாதை மாற்றப்படவில்லை. மாறாக ஊர்வலம் நடைபெறும்போது விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது நிறுத்தப்படும். ஊர்வலம் கோவிலுக்கு சென்றடைந்த பின்னரே விமான நிலையம் திறக்கப்படும். காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறை இன்றும் பின்பற்றப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது.
இதையொட்டி இன்று மாலை 4 மணிக்கு சுவாமியை கோவிலில் இருந்து ஆராட்டு நடத்த ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். அதன் பிறகு 9 மணிக்கு ஆராட்டு முடிந்து சுவாமி கோவில் திரும்புவார். இந்த 5 மணி நேரமும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுகிறது. இந்த நேரத்தில் விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கவோ, புறப்படவோ அனுமதி இல்லை.
இதுபற்றி விமான நிலைய இயக்குனர் ஜார்ஜ் தாரகன் கூறியதாவது:-
சர்வதேச அளவில் கோவில் திருவிழாவுக்காக ஒரு விமான நிலையம் மூடப்படுவது இங்குதான் என நினைக்கிறேன். இங்கு நடைபெறும் விழா, பாரம்பரிய விழாவாகும். அதற்கு மரியாதை அளிக்கும் வகையில், விமான நிலையம் மூடப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பாதுகாப்பு கருதி விமான நிலைய ஓடு பாதையில் ஊர்வலம் செல்லும்போது, பாதையின் இருபுறமும் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் அணிவகுத்து நிற்பார்கள். ஓடு பாதையை தாண்டிச்செல்ல திருவி தாங்கூர் ராஜகுடும்பத்தின் இப்போதைய தலைவர் மூலம் திருநாள் ராமவர்மா மற்றும் கோவிலில் இருந்து சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.