ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா பகுதியை தங்களது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இந்தப் போராளிகள் இந்த கடலோரப் பகுதி வழியாக ஆயுதங்களை கடத்தி வருகின்றனர். சவுதி அரசின் துணையுடன் இவர்கள் மீது ஏமன் நாட்டு ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவை அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஹோடைடா பகுதியை ஒட்டியுள்ள பாப் அல்-மன்டேப் ஜலசந்தி வழியாக நேற்று வந்த படகின் மீது ஏமன் நாட்டை சேர்ந்த ‘அப்பாச்சி’ ரக விமானப் படை ஹெலிகாப்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு உள்ளான படகில் சோமாலியா நாட்டை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் அதிகாமனவர்கள் அடைக்கலம் தேடி சூடான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை அளித்திருந்த அடையாளச் சான்றிதழ்களுடன் சென்றதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் 31 பேர் பலியானதாகவும், குண்டு வீச்சினால் சேதமடைந்த படகில் இருந்து கடலில் குதித்து உயிர் தப்பிய சுமார் 80 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.