வேகவைக்காமல், எண்ணெய் இல்லாமல் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து சென்னையில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் செஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னை விமானநிலைய திருமண மண்டபத்தில் புதன் அன்று நடத்தப்பட்ட இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.
கத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், எலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட், இளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல், கம்பு – அவல் புட்டு என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.
இயற்கை காய்-கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு சுத்தமான ஆரோக்கியமான 300 வகையான உணவுகள் எண்ணெய் இன்றி, நெருப்பு இன்றி தயாரிக்கப்பட்டு இருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வலியுறுத்தி நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியை யுனிவர்ஸல் புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இயற்கை உணவு சமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சியில் சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமௌலி, நடிகை அஞ்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலக சாதனை குறித்து செஃப் படையல் சிவக்குமார் கூறும்போது, இயற்கையான உணவுப் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பதாகத் தெரிவித்தார். உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதற்கு காரணமான எண்ணெய்யை தவிர்த்தாலே நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று கூறினார். நோய்களற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க எண்ணெய் இல்லா, வேகவைக்காத உணவுப் பழக்கத்துக்கு மாறுவதே சிறந்தவழி என்று கூறிய சிவக்குமார், ஆரோக்கிய வாழ்வியலை வலியுறுத்தும் வகையில் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைக்கப்பட்டதாகக் கூறினார்.