தமிழகம் முழுவதும் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு அரசு ஒரு புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக்கொள்கை உருவாக்க உள்ளது.வீடு கட்டும் செலவினத்தைக் குறைத்தல், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை உள்ளடக்கிய அனைவருக்கும் போதுமான வீட்டு வசதியினை கிடைக்க செய்தல்; வாங்கத்தக்க விலையில் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்தல்; அனைவருக்கும் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய வீடு வழங்குதலை உறுதி செய்தல் போன்றவை இக்கொள்கையின் சிறப்பம்சங்களாகும்.பிரதமரின் வீட்டுவசதி திட்ட நிதி, சிறப்பு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் மூலம் திரட்டப்படும் நிதி, பயனாளிகளின் பங்களிப்புத் தொகை மற்றும் தமிழக அரசால் அளிக்கப்படும் பற்றாக் குறை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி, குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம், எர்ணாவூரில் 676 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6,874 வீடுகள் கட்டித்தரப்படும்.
இந்த திட்டத்தில் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் வகைப்பாட்டின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 5 ஆயிரத்து 589 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் 1,86,308 தனி வீடுகள் கட்டப்படும்.மேலும், நடப்பாண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் வகைப்பாட்டின் கீழ் ஒரு குடியிருப்பு 10 லட்சம் ரூபாய் வீதம் 14,828 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,482 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.மேற்கண்ட இரண்டு வகைபாட்டின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மாநில அரசின் மானியமாக 2,007 கோடியே 53 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.நகரமைப்பு வல்லுநர்கள், மண்டல மற்றும் உள்ளூர் விதிமுறைகளை அறிந்து, மண்டலங்களுக்கு இடையேயான நகர வளர்ச்சி குறித்த அம்சங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாநில அளவில் நகரமைப்பு வல்லுநர்களுக்கான ஒரு பணித் தொகுப்பினை உருவாக்கி, அதற்கென தனியாக பணிவிதிகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணித் தொகுப்பிலுள்ள நகரமைப்பு வல்லுநர்கள், நகர் ஊரமைப்புத்துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுப்பணி அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் ஆணையாளர் பணிநிலை கட்டுப்பாட்டு தகவாளராக இருப்பார்.புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக, சென்னை அடையார் புற்றுநோய் மையத்தில் 120 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய்க்கான உயர் சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான கட்டிடப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி, மதுரை, கோவை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் நான்கு மண்டல புற்றுநோய் மையங்கள் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.இந்த ஆண்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை, அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 64 கோடி ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் பொருட்டு, நவீன லீனியர் ஆக்சிலேட்டர் கருவி நிறுவப்படும்.
தாய்சேய் நலனைப் பேணிக் காக்க, மயிலாடுதுறை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 20 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு மேன்மைமிகு மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் தாய் மற்றும் சேய் இறப்பு பெரிய அளவில் குறைக்கப்படும்.தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு சேவை, தேசிய நலவாழ்வு குழும நிதி மற்றும் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து திருப்பூர், ராமநாதபுரம், பெரம்பலூர், செய்யாறு, உளுந்தூர்பேட்டை, ராஜபாளையம், திருத்தணி, ஆத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் 57 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
இது தவிர, 10 தாலுக்கா மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசரகால நிலைப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும்.5 தேசிய நெடுஞ்சாலைகளில் அனைத்து முதலுதவி வசதிகளைக் கொண்ட நடமாடும் அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடங்கப்படும்.நடப்பாண்டில் காஞ்சீபுரம், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 45 கோடி ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்படும்.கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், வேலூர், விருதுநகர், கோவை, காஞ்சீபுரம், மதுரை, நாகர்கோவில், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருப்பூர், சேலம், விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
அரசு மருத்துவமனைகளில் நடப்பாண்டில் 7 சி.டி. ஸ்கேன் கருவிகள் மணப்பாறை, மேட்டூர் அணை, மன்னார்குடி, பென்னாகரம், ஓசூர், பரமக்குடி, மற்றும் குளித்தலை ஆகிய 7 அரசு மருத்துவமனைகளில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும். தாய் சேய் நலப் பணிகளை திறம்பட செயல்படுத்தி வரும் 9,994 சுகாதார செவிலியர்களுக்காக 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கைக்கணினிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.