எனது 25 ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996 ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007 ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர்.
சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும் இந்தப் பாத்திரங்களாகவே எக்காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
பரத்வாஜ் இசை, வைரமுத்து பாடல்கள், லெனின் படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கம் அனைத்துமே ஈடு இணையற்றவைகள்.
தமிழ் மரபின் குடும்ப உறவுகள், உழவுக் குடும்பத்தின் சிக்கல்கள், சினிமாத்தனமற்ற உரையாடல்கள் என அனைத்தும் கொண்ட இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம். நான் மட்டும் நினைத்தால் அவைகள் இடேறாது.
எழுத்தில் உயிர் வாழ்ந்த ஒன்பது ரூபாய் நோட்டு உயிர் ஓவியமாக, திரைப்படமாக வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மருத்துவர் கணேசன் அவர்களை என்றென்றும் மறவேன்.
– தங்கர் பச்சான்