மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக லட்சக் கணக்கான ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஆபத்தான கடல் பயணம் வழியாக இவர்கள் வங்கதேசத்தை வந்தடைகின்றனர். இம்மாதிரியான பயணத்தின் போது படகு கவிழ்ந்து பலர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.
நேற்று இரவு மியான்மரில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுடன் படகு ஒன்று வங்க தேசம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது. இரவு 10 மணி வங்கதேசம் – மியான்மர் எல்லை அருகே நஃப் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 12 பேர் பலியாகி உள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். வங்கதேச கடலோர காவல் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய மீட்புப் பணியில் 12 பேரின் உடல் கிடைத்துள்ளது. பலியானவர்களில் 10 பேர் குழந்தைகள் ஆவர். பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகு கவிழ்ந்த இடம் மியான்மர் எல்லைக்கு உட்பட்டது என்பதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகவே படகு கவிழ்ந்தாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.