விஜய்மல்லையா ரூ. 950 கோடியில் பாதி பணத்தை இந்தியாவிற்கு வெளியே முதலீடு செய்து உள்ளார் என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்து உள்ளது.பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகள் உள்பட 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 2–ந்தேதி அவர் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விஜய் மல்லையா மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கதுறையும் விஜய் மல்லையாவின் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு, மும்பையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 3 முறை அவருக்கு அமலாக்கத்துறை சம்மனும் அனுப்பியது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. டெல்லி மேல்–சபை எம்.பி.யான அவர் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் இங்கிலாந்து சென்று விட்டது, தெரிய வந்தது. அமலாக்கப்பிரிவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. ‘‘மத்திய அரசின் நடவடிக்கை குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி விஜய்மல்லையா கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார். அதற்குள் பதில் அளிக்காவிட்டால், மத்திய வெளியுறவு அமைச்சகம் அவருடைய பாஸ்போர்ட்டை நிரந்தரமாக திரும்பப் பெறும் நடவடிக்கையில் இறங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே விஜய் மல்லையா ஐ.டி.பி.ஐ. வங்கியில் பெற்ற ரூ.900 கோடி கடனில் பாதி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்து உள்ளார் என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்து உள்ளது. ரூ 430 கோடியளவில் பணம் விமான வாடை, உதிரி பாகங்கள் இறக்குமதி, பராமரிப்பு சேவைகள் என்று போலியான காரணங்கள் கூறப்பட்டு இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்று அமலாக்கப்பிரிவு கூறிஉள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அமலாக்கப்பிரிவு அதிகாரி, பணம் இந்தியாவிற்கு வெளியே சொத்துக்கள் வாங்க பயன்படுத்தப்பட்டு இருக்கலாம், வரிமோசடியில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறிஉள்ளதாக ஆங்கிலப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. விஜய் மல்லையாவின் ஆவணங்களை பரிசோதனை செய்த பின்னர், பணம் பெற்றவர்கள் அவர்களுடைய் வங்கி கண்க்குடன் பின்தொடரப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.