’’தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி சபாநாயகர் சட்ட மன்ற சீருடை பணியாளர்கள் என்ற போர்வையில் காவல் துறையினரை சட்டமன்றத்திற்குள் நுழைய வைத்து, என்னை தாக்கி சட்டையை கிழித்த அராஜகத்தை தாங்கிக் கொள்ள முடியாத கடலூர் மாவட்டம் சோனாஞ்சாவடி, செம்மங்குப்பம் ஊராட்சி 9வது வட்ட தி.மு.க. செயலாளர் திரு வடிவேல் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு நான் துடித்துப் போனது மட்டும் இன்றி தாங்க முடியாத துயரத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன்.
அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் என்மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொலைக்காட்சியில் பார்த்த கழக உடன்பிறப்புகள் மிகவும் பதற்றமடைந்து என்னை தொலைபேசி மற்றும் கைபேசி வாயிலாக தொடர்ந்து விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் சில உடன்பிறப்புகள் ஆவேசமாகவும், உணர்ச்சி மிகுந்தும் என் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்கும் போது “ஜெயிலில் இருப்பவரால் இயக்கப்படும் ஆட்சியிலும்”, “அந்த ஆட்சியில் உள்ள சட்டமன்றத்திலும்” இதற்கு மேல் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதை விளக்கி சொல்லி இது போன்ற சலசலப்புக்களுக்கு எல்லாம் எந்தக் காலத்திலும் திராவிட முன்னேற்ற கழகம் அஞ்சாது என்ற உறுதியை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறேன்.
அது மட்டுமின்றி இது போன்ற தாக்குதலைப் பார்த்து பயந்து விட மாட்டேன் என்று அவர்களிடம் எடுத்துக் கூறி இந்த அராஜக அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுக வின் போராட்டம் ஓயாது என்றும் அனைத்து கட்சிகளையும் சேர்த்துக் கொண்டும் இந்த அறவழி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் அறிவித்தும் இருக்கிறேன். இப்படியொரு சூழ்நிலையில் குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சேர்ந்த கழக தொண்டர் வடிவேலு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன என்பதும் அந்தப் பிள்ளைகள் எல்லாம் கல்லூரி மற்றும் பள்ளி படிப்புகளைக் கூட இன்னும் முடிக்காமல் இருக்கிறார்கள் என்றும் கழக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்னிடம் தெரிவித்த போது நான் பேரதிர்ச்சிக்கு உள்ளானேன்.
அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நிச்சயம் கழகம் பொறுப்பு எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகமான தருணத்தில் “தயவு செய்து யாரும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” என்று கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். பாச உணர்வுடன் என்னைப் பார்த்ததும் அண்ணன் என்றும் தம்பி என்றும் தளபதி என்றும் அழைக்கும் உங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்ய முடியும் என்று ஏங்குகிறேன். ஆகவே நீங்கள் என்னோடு இருக்க வேண்டும், தமிழர்களை வாழ வைக்கும் இந்த இயக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக தயவு செய்து எந்த உடன்பிறப்பும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’’