294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 6 கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடக்கிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அணியாகவும், மார்க்சிஸ்டு மற்றும் காங்கிரஸ் இன்னொரு அணியாகவும் களம் காண்கின்றன. மற்றொரு அணியாக பா.ஜனதா போட்டியிடுகிறது. அங்கு, கடந்த 4 மற்றும் 11-ந்தேதிகளில் இரு பிரிவுகளாக 49 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
நேற்று 7 மாவட்டங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 1 கோடியே 20 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதிகளில் 29 பெண்கள் உள்பட 383 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைச்சூங் பூட்டியா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சிலிகுரி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மந்திரியும் சிலிகுரி மேயருமான அசோக் பட்டாச்சாரியாவை எதிர்கொள்கிறார்.வடக்குப் பகுதி வளர்ச்சி மந்திரி கவுதம் தேப்(தப்கிராம்-புல்பாரி), உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி கிருஷ்னேந்து நாராயண் சவுத்ரி(இங்கிலிஷ் பஜார்), பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பிரபல நடிகை லாக்கெட் சாட்டர்ஜி(மயூரேஸ்வர்) ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகவும் இது அமைந்து உள்ளது.
தேர்தல் நடந்த அலிபுர்துவார்(5 தொகுதிகள்), ஜல்பைகுரி(7), டார்ஜிலிங்(6), வடக்கு டினாஜ்பூர்(9), தெற்கு டினாஜ்பூர்(6), மால்டா(12), பிர்பும்(11) ஆகிய மாவட்டங்களில் காலை 7 மணியில் இருந்தே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு காணப்பட்டது.இதமான தட்பவெப்பம் நிலவியதால், பல வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கும் முன்பாகவே நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் திரண்டு இருந்தனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 750 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.வாக்குப் பதிவு தொடங்கிய முதல் 4 மணி நேரத்தில் 40 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதேபோல் 300-க்கும் மேற்பட்ட புகார்களும் தேர்தல் கமிஷனுக்கு வந்து குவிந்தன. பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பைச்சூங் பூட்டியா, தனது தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீகுரு வித்யாபீட வாக்குச் சாவடியில் எதிர்க்கட்சியினர் கள்ள ஓட்டுப் போடப்பட்டதாக தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். பிர்பும் மாவட்டத்தில் தேர்தல் நடந்த 11 தொகுதிகளிலும் பல வாக்குச் சாவடிகளை திரிணாமுல் காங்கிரசார் கைப்பற்றி ஓட்டுகளை போட்டதாக மார்க்சிஸ்டு, காங்கிரஸ் கூட்டணி குற்றம் சாட்டியது.பிர்பும் மாவட்டத்தில் உள்ள இலாம்பூர் தொகுதியில், பூத் ஏஜெண்டுகளாக செயல்பட்ட 6 பா.ஜனதா நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏஜெண்டுகள் 2 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாயினர்.