முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையில் முறைப்படி முதல்வராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. பொறுப்பேற்றவுடன் அவர் 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார்.முன்னதாக தலைமைச் செயலகம் வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.தம்பிதுரை எம்.பியும், மற்ற அமைச்சர்களும் முதலமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பூச்செண்டுகள் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் அதிமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து, ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்து தனது பணிகளைத் தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையை, ஓ.பன்னீர்செல்வம் கடைசி வரை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற அமர்வு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.