கடந்த மாத இறுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலால் அந்த மாவட்டமே தலைகீழாக புரட்டி போட்டது போல் கடும் பாதிப்பிற்கு ஆளானது. குறிப்பாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் புயலில் சிக்கி காணாமல் போயினர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.இந்திய கடற்படை மீனவர்களை தீவிரமாக தேடி வருவதாக கூறினாலும் அவர்கள் மீட்ட மீனவர்களின் எண்ணிக்கையோ மிக குறைவு. மீனவர்கள் காணாமல் போய் 10 நாட்கள் கடந்த பின்னரும் அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என கன்னியாகுமரி மக்கள் குற்றம் சாட்டினார். இதனிடையே களத்தில் நேரடியாக குதித்த மீனவர்கள் கடலில் சடலமாக மிதந்த பல மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது மக்களின் கோபம் இன்னும் அதிகமானது.
நாட்கள் பல கடந்தும் காணாமல் போன மீனவர்கள் மீண்டும் கரை திரும்புவார்கள் என்ற நம்பிகையுடன் அவர்கள் குடும்பத்தார் காத்து இருந்தனர். கடலில் தத்தளித்த சில மீனவர்களை சக மீனவர்களே தேடி கண்டு பிடித்து கரை சேர்த்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் 8 விசை படகுகளில் காணாமல் போன மீனவர்களை தேடி 11 நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றனர். வெறும் ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மீனவர்களை தேடி சென்ற அவர்கள் கொச்சின் கடற்பகுதி அருகே கடலில் தத்தளித்த 10 மீனவர்களை மீட்டு கரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனவர்கள் உள்ளே சிக்கி இருக்கலாம் என்பதால் தங்கள் தேடுதல் வேட்டையை அவர்கள் தீவிர படுத்தினர். சொந்த செலவில் படகுகளுக்கு டீசல் போட்டு கடலுக்குள் சென்றனர். 300 கடல் மைல்களுக்கு அப்பால்
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 47 மீனவர்களை அவர்கள் தற்போது மீட்டுள்ளனர். 4 விசை படகுகளில் இருந்த 47 மீனவர்களும் உணவு, நீர் இன்றி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடலில் தவித்து வந்துள்ளனர். அவர்களை மீட்ட வல்லவிளை மீனவர்கள் தற்போது அவர்களை கரைக்கு அழைத்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்கள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் மீனவ கிராமங்கள் உள்ளன. ஜிபிஎஸ் கருவியை வைத்து மட்டுமே இதனை மீனவர்களையும் சக மீனவர்கள் மீட்டுள்ளனர்.