மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் எம்.எல்.ஏவாக இருக்கும் பாலபாரதிக்கு சீட் வழக்கப்படவில்லை.இது குறித்து பல்வேறு கருத்துக்கள் யூகங்களில் அடிப்படையில் வெளியாகி வருகிறது. குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்த அன்று அதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் விதமாக பாலபாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் “நல்லதோர் வீணைசெய்து….” என்று பதிவு செய்திருந்தார் .இதையடுத்து மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமை ஏற்பதை அவர் விரும்பவில்லை என கூறப்பட்டது. ஆனால் அந்தப் பதிவு எதேச்சையாக எழுதப்பட்டது என்று பாலபாரதி மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாலபாரதிக்கு சீட் ஒதுக்கப்படாததன் காரணம் அந்த பேஸ்புக் பதிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது காரணம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கட்சி கொள்கைகளின்படி ஒரு வேட்பாளர் மூன்று முறைக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது. ஏற்கனவே பாலபாரதிக்கு 2001, 2006, மற்றும் 2011 வருடங்களில் நடந்த சட்டபேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், வேறு அரசியல் காரணங்கள் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.