சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த 11 மாடி குடியிருப்பு 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதியன்று மழையின் போது இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இதையடுத்து இடிந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தையும் பாதுகாப்பு காரணத்துக்காக இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கட்டிட உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கட்டிட இடிப்பு சம்பந்தமாக என்ஜினீயர்கள் உள்ளிட்ட அனைத்து சாட்சியங்களிடம் மீண்டும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மற்றும் மூத்த வக்கீல் அசோக் குமார் குப்தா ஆஜராகி நிபுணர் குழு மவுலிவாக்கத்தில் சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். 2 நிபுணர்களும் இந்த ஆய்வில் கலந்து கொண்டதாகவும், இதுதொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தங்களுக்கு 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினார் .அதற்கு நீதிபதிகள், இந்த கட்டிடம் எந்த அளவில் பாதுகாப்பாக உள்ளது என்று கேள்வி எழுப்பினர். அசோக் குப்தா பதில் அளிக்கையில், கட்டிடம் உறுதியாக நிற்கும் வகையில் தாங்குமானம் இல்லை என்றும், உடனடியாக கட்டிடத்துக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் யோகேஷ் கன்னா, இந்த கட்டிடத்துக்குள் நுழைந்த தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் அடித்தளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியுள்ளது என்றும், அந்த தண்ணீர் வெளியேற எந்த வழியும் இல்லாததால் கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது என்றும் கூறினார்.அதற்கு ஆய்வுக்குழுத் தலைவர் அசோக் குப்தா, இதுகுறித்த இறுதி அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.இதற்கு நீதிபதிகள், இடைக்கால அறிக்கையை வருகிற 22-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் மனுவின் மீதான விசாரணையை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.