பாமக பொருளாளரும், கவிஞருமான ம.திலகபாமாவின் நூல் வெளியீட்டு விழா

பாமக பொருளாளரும், கவிஞருமான ம.திலகபாமாவின் நூல் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. செய்தி அலை பதிப்பகத்தின் “இப்படிக்கு திலகபாமா” என்ற நூலை மூத்த பத்திரிகையாளர் மாலன் வெளியிட சாணக்யா யுடியூப் சேனலின் நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜ் பாண்டே பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பாமக பொருளாளர் திலகபாமா பேசியதாவது: திலகபாமா அரசியல், இலக்கியம் என இரண்டும் கலந்து நிற்பவள். எனக்கு இரண்டும் வேறு, வேறு அல்ல. அய்யா பெயரையும், சின்னய்யா பெயரையும் புத்தகத்தில் போட்டிருக்கிறீர்கள் என கேட்கிறார்கள். இன்றைக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிவகாசியில் இருந்து ஒருவர் என்னைக் கண்டெடுத்தார் என்றால் அது மருத்துவர் அய்யா தான், அதனை மறக்க முடியாது. கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் மனிதர்கள் மேலான வெறுப்பாக ஒருபோதும் மாற்றிக்கொண்டது இல்லை. அது இலக்கியம் எனக்கு தந்த பண்பு. 2006யில் இருந்து இப்போது வரை பொது நலன்கள் சார்ந்த அறிக்கைகள் இந்த புத்தகத்தில் உள்ளன. ஒரு அமைப்பு மக்களுக்கான அமைப்பாக எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது உடைத்து வேறு ஒன்றாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த மாற்றத்தை செய்ய வேண்டியவர் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் தான் இந்த எழுத்துக்கள் உங்களை சேர்ந்துள்ளன. பட்டிவீரன் பட்டியில் இருந்து நான் வந்த போது எந்த சாதி எனக்கு சொல்லித் தரப்படவில்லை. அங்கிருந்து வெளியே வந்து கிராமங்கள் தோறும் பயணிக்கும் போது சாதி என்ற ஒன்று உள்ளது. அதனை சாதியில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என கற்றுக்கொண்டேன்.

தென் மாவட்டங்களில் ஆண்ட சமூகம் எனக்கூறுபவர்கள் கூட ஒரு இடத்தில் அன்றாடம் காட்சியாக உட்கார்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அப்படியானால் சமூக அமைப்புகள், சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. அரசியல் இதை எப்படி சரி செய்கிறது என பல கேள்விகளை எனக்குள் வைத்துக் கொண்டே, சிலவற்றை மட்டும் எழுதி பார்த்திருக்கிறேன். அரசியலே தவறு என எனது இலக்கியம் எனக்கு கற்பிக்கவில்லை. அதற்கு பதிலாக நடக்கும் சம்பவங்களைச் சார்ந்த எனது அரசியல் கருத்துக்களையே முன்வைத்திருக்கிறேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021யில் திமுக ஆட்சிக்கு வந்த போது, மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யமாட்டார்களா?, அவர்களையும் பாராட்டிவிட மாட்டோமா? என நினைத்தேன். ஆனால் 5 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் அப்படியே முடித்துவிட்டார்கள்.

“இலவசங்கள் எல்லாம் ஏமாற்று வேலை” என்ற கட்டுரையை எழுதிய பிறகு தான், இலவசம் என்ற வார்த்தையை விலையில்லாத என்ற வார்த்தையை அரசு மாற்றியது. அப்படி என்றால் எனது ஒரு சொல் வினையாற்றியிருக்கிறது. ஒரு சொல் மந்திரமாக மாறி ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வந்து விடாத என்ற எதிர்பார்ப்புடன் என் மனவலியை, என் கேள்வியை எழுதி பார்த்துக்கொண்டே இருக்கிறேன் எனக்கூறினார்.

ஒரு காலத்தில் மிகப்பெரிய பதிப்பகங்கள் எங்களால் உங்களுடைய புத்தகங்களை பதிப்பிக்க முடியாது. உங்களுடைய புத்தகங்களை பதிப்பித்தால், வேறு யாரும் புத்தகங்களை பதிப்பிக்க மாட்டோம் என மிரட்டுகிறார்கள் எனக்கூறினார்கள். நீங்கள் போட்ட கருத்து பிடிக்கவில்லை அதனால் வெளியிடவில்லை என சொன்னால் ஏற்றுக்கொள்ளாலாம். ஆனால் உன்னுடைய புத்தகத்தை பதிவிட்டால், எனக்கு வேறு யாரும் புத்தகம் தரமாட்டார்கள், விற்பனை நடக்காது என சொன்னால் நீங்கள் இலக்கியத்திற்கு என்ன செய்ய வருகிறீர்கள். மனிதன் தவறு செய்யலாம். ஆனால் தவறுக்குள்ளேயே நிற்காமல் வெளியே வர வேண்டும். அதற்காக தான் எழுதி பார்க்கிறோம், படித்து பார்க்கிறோம். அறிவு சார்ந்த இடங்களில் கூட இன்றைக்கு போலித்தனங்களும், பொய்மைகளும் குடியேறிவிட்டன. இன்று ஆசிரியர் பணிக்கே லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தான் போக வேண்டியுள்ளது. அப்புறம் எப்படி அந்த ஆசிரியர் என் பிள்ளைகளுக்கு உண்மையை சொல்லிக் கொடுப்பார். நானே பல நேரம் தனித்துவிடப்பட்டதாக தான் நினைக்கிறேன். எனக்கு எப்படியாவது நம் உணர்வுடன் பொருத்திப் போகிற ஒருவர் கிடைக்கமாட்டார்களா? என்ற எண்ணம் தான் என்னை மீண்டும், மீண்டும் பிரச்சனைகளை எழுதி பார்க்க வைக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதோ, போராடுவதோ எனக்கு போதுமானதாக இல்லை. எனக்கு என்னுடைய சொல் நிலத்தில் விழுந்து வினையாக மாற வேண்டும்.

அனைவரும் சமூக அக்கறையுடன் இருக்கிறோம் என காட்டிக்கொள்ள நினைக்கிறோம். மதுக்கடையை மூட ஆணை வாங்கி வைத்த போதும் அதனை மீறி கடையை திறந்தார்கள். அதை எதிர்த்து போராட சென்ற போது பெண்களை அசிங்கமாக திட்டினால் ஓடிப்போய்விடுவார்கள் எனக்கூறிய போது எனக்கு கோபம் வந்தது, கல்லை எடுத்து வீசினேன். கடையில் இருந்த மது பாட்டில்களை தீயிட்டு கொளுத்திவிட்டு தான் வந்தோம். அன்று என்னுடன் கைதான பெண்கள் அனைவருமே அரசியல், போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத பெண்கள், கைக்குழந்தைகளை வைத்திருந்த பெண்கள். இன்று இவர்களை கைது செய்தால் தான் அரசியலுக்கு வரமாட்டார்கள் என கைது செய்யப்பட்டார்கள். சொற்கள் வினையாக மாறும் தருணங்களை மீண்டும், மீண்டும் தேடிக்கொண்டே இருக்கிறேன். இந்த சமூகத்தை மாற்ற வேண்டிய முதல் நபராக இருக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் எனது சொற்களை விதைத்துக் கொண்டே இருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் இனி குடும்ப வாழ்க்கை தேவையில்லை என தாலியைக் கழட்டி தனது தங்கையின் கழுத்தில் போட்டுவிட்டு வந்தவர் பொன்னம்மாள். அவரை இன்று அரசியலும் மறந்துவிட்டது, அவர் சார்ந்த சமூகமும் மறந்துவிட்டது. அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வருகிறேன். இது திலகபாமாவை பதிவு செய்வதற்காக அல்ல, மீண்டும், மீண்டும் இந்த வரலாற்றை சரி செய்வதற்காக நம்மையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் தான் எனது குரலை நான் பதிவு செய்துள்ளேன் எனக்கூறினார்.