தே.மு.தி.க- த.மா.கா- மக்கள் நல கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய குமரி மாவட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ நேற்று வந்தார். மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் மாலையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக வைகோ மார்த்தாண்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை ஏற்படாத பிரமிக்கத்தக்க மாற்றம் இந்த தேர்தலில் அரங்கேற உள்ளது. 1967-ல் பொறுப்பேற்ற அண்ணாவின் ஆட்சிகாலம் வரை தமிழ்நாட்டு அரசியலில் ஆரோக்கியமும், ஜனநாயகமும் இருந்தது. இன்று தமிழ்நாட்டு அரசியல் நரககுழியில் உள்ளது. பணம் வழங்கப்படுவதை தடுக்க தே.மு.தி.க-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. சார்பில் கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் மீறி எங்கள் அணி வெற்றி பெறும். இந்த தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியை இந்தியாவே கூர்ந்து கவனித்து ஆய்வு செய்யும். தமிழ்நாட்டில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 50 சதவீத இளைஞர்கள் எங்கள் அணிக்கு ஆதரவாக உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. வரும் நாட்களில் அது 80 சதவீதமாக உயரும். தமிழ்நாட்டில் முதன் முதலில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.அது தவறுகள் ஏற்படாத வெளிப்படையான அரசாக அமையும். இலங்கையில் ஈழ போராட்டம் முடிவடையாது. ஈழப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு பொது வாக்கெடுப்பு நடத்துவது தான். ஈழப் பிரச்சினையில் எங்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் முரண்பாடுகள் உள்ளன. நாங்கள் சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும். அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உறுதியாக உள்ளோம். ஆனால் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை. ம.தி.மு.க எந்த சமரசமும் செய்யாது. இதில் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார