உயிர் காக்கும் மருத்துவத் துறை என்பது அத்தியாவசியப் பணிகளின் கீழ் வருகிறது என்பதால், செவிலியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதில் தி.மு.கழகத்துக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அரசு இதனை உணராமல், சுகாதாரத் துறை அமைச்சர் பெயரளவுக்கு, குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிலும் நம்பகமான எந்தவொரு உத்தரவாதமும் தராமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்ததும், காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்து போராட்டத்தை ஒடுக்க நினைத்தததும் செவிலியர்களின் போராட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது.
இரவு பகல் என இடைவெளியின்றி பெண்களே முன்னின்று நடத்தும் இப்போராட்டத்தில் ஏற்படக்கூடிய இயற்கையான இடையூறுகளை சமாளிக்கவும் சிரமப்படும் நிலை உள்ளது. நோயாளிகளின் நலன் காக்கும் சேவையில் ஈடுபடும் செவிலியர்களின் நலனைக் காக்கும் வகையில் அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டக் களத்திற்குச் சென்று செவிலியர்களை சந்தித்து, அவர்களின் பிரநிநிதிகளுடன் பேசி, கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் அளிப்பதுடன், அவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, போராட்டத்தைச் சுமுக முறையில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை தி.மு.க. வலியுறுத்துகிறது.
செவிலியர்களின் கோரிக்கையில் உரிய அக்கறை செலுத்தாத அரசு, மருத்துவமனை நிர்வாகத்திலும் அலட்சியம் காட்டி வருவதை ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. அவசர சிகிச்சைக்கான மருந்துகள், குளூக்கோஸ் பாட்டில் போன்ற அத்தியாவசிய மருந்துகள் ஆகியவைகூட பல அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பதையும், நோயாளிகளை வெளியில் பணம் கொடுத்து வாங்கி வரச் செய்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதையும் சில ஏடுகள் படம் பிடித்து வெளியிட்டுள்ளன.
அதுபோலவே, பல மருத்துவமனைகளில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுவதையும் தொலைக்காட்சிகள் வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் புறக்கணிக்கும் ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசு, தனது அலட்சியத்தால் நோயாளிகளின் உயிருடன் விளையாடுகிறது.